எப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!
'' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''
'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.
'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''
''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''
''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''
'' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''
''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''
''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''
''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''
'' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''
''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''
''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''
''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''
''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''
''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''
''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''
''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!
இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''
''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''
''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''