எத்தனை 'அறிவு' வந்தாலும் 'வேலாயுதம்' நம்பர் ஒன் 'ஜெயம்' ராஜா
விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்தரன் தயாரித்து இருக்கிறார்.
ஜெயம் ராஜாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னயில் நேற்று ( அக்டோபர் 21 ) நடைபெற்றது. 'வேலாயுதம்' என்ற பெரிய கமர்ஷியல் படத்தினை இயக்கிய உற்சாகம் அவரது பேச்சில் தெரிந்தது.
அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியது :
" இதுவரை 6 படங்களை இயக்கி இருக்கிறேன். அதில் 5 படங்கள் ரீமேக் படங்கள். 'வேலாயுதம்' என்னுடைய 7வது படம்.
இப்படத்தின் மூலம் என்னுடைய திரையுலக வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறேன். நானும் விஜய் சாரும் சந்திக்கும் போது " நீங்கள் உங்க தம்பி மட்டும் தான் வச்சு படம் பண்ணுவீங்களா... என்னை வச்சு எல்லாம் படம் பண்ண மாட்டீங்களா? " என்று கேட்டார்.
அந்த ஒரு பெரிய ஹீரோ கேட்கும் போது என்னால் ஒன்னும் சொல்ல முடியவில்லைல். அப்படி முடிவானது தான் வேலாயுதம். இப்படம் ஆரம்பிக்கும் போது என்ன நினைத்தேனோ அதை கொடுத்து இருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறேன்.
என்னை பொறுத்த வரை ஒரு மாஸ் ஹீரோ படம் என்றால் 'எங்க வீட்டு பிள்ளை', 'பாட்ஷா', 'அந்நியன்' போன்ற படங்களை தான் கூறுவேன். அந்த வரிசையில் கண்டிப்பாக 'வேலாயுதம்' படம் இருக்கும். அப்படங்களில் எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவை வெவ்வேறு கதை கோணங்களில் காட்டி இருப்பார்கள். நான் 'வேலாயுதம்' படத்தில் கொஞ்சம் சமூக அக்கறை கலந்து கூறி இருக்கிறேன்.
எத்தனை ஒன்கள் வந்தாலும், எத்தனை அறிவு வந்தாலும் கண்டிப்பாக 'வேலாயுதம்' நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான் படம் ஆரம்பிக்கும் போது எந்த ஒரு படம் வந்தாலும், நம்ம படம் தனியாக தெரிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அதை இப்போது நீருபித்து இருக்கிறேன்.
ஒரு வருடத்தில் 100 படங்கள் வருகிறது என்றால் தயாரிப்பாளருக்கும் 5 படங்கள் தான் போட்ட காசை எடுத்து கொடுத்து இருக்கின்றன. அதில் என்னுடைய படங்களும் ஒரு படமாக இருந்து இருக்கின்றன.
'ஆசாத்' என்னும் தெலுங்கு படத்தின் மூலக்கதையை எடுத்துக்கொண்டு நான் திரைக்கதையை மாற்றி இருக்கிறேன். 'ஆசாத்' கதையை நான் எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. 'ஆசாத்' படத்தின் இயக்குனர் திருப்பதிசாமி என்னுடைய நெருங்கிய நண்பர். முதலில் என்னிடம் தான் அந்த கதையை சொன்னார். நானும் அவரும் 'ஆசாத்' தொடங்கும் முன்பு படத்தை பற்றி நிறைய பேசி இருக்கிறோம். என்னிடம் விஜய் படம் பண்ணலாம் என்று கேட்டவுடன் எனக்கு தோன்றிய முதல் கதை 'ஆசாத்' மட்டுமே.
'வேலாயுதம்' படத்தினை என்னுடைய முந்தைய படங்களோடு ஒப்பீடு செய்தீர்கள் என்றால் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' எடுத்த இயக்குனரா 'வேலாயுதம்' படத்தினை இயக்கி இருக்கிறார் என்று கேட்பீர்கள். கமர்ஷியல், வன்முறை, க்ளாமர் என எனது முந்தைய படங்களில் இல்லாததை இந்த படத்தில் சேர்த்து இருக்கிறேன்.
நான் இயக்க போகும் அடுத்த படத்தினை கல்பாத்தி S.அகோரம் சார் தயாரிக்க இருக்கிறார். என்னை அஜீத் சாருடன் இணைந்து படம் பண்ண போகிறீர்களா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. நான் அவரை சந்தித்தது கூட இல்லை. விஜய் சாருடன் இணைந்து படம் பண்ணிவிட்டு அஜீத் சாருடன் இணைந்து படம் பண்ணினால் நன்றாக தான் இருக்கும். "
No comments:
Post a Comment