page
Saturday, 27 August 2011
‘வேலாயுதம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைக்காது: விஜய் பேட்டி
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இப்படத்தை பற்றி விஜய்யிடம் கேட்டதில், அவர் கூறியதாவது
வேலாயுதம் படத்தின் கதை பற்றி இயக்குநர் ராஜா என்னிடம் சொல்ல வந்தபோது, படத்தின் கதையை கேட்ட எனக்கு மிகவும் பிடித்து போனது. அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டேன். படம் மிகவும் அழகாக வந்திருக்கிறது.
எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கணும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு ஆசை எனக்கும் இருந்தது. அப்படிப்பட்ட படம் தான் இந்த வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. வேலாயுதத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும்.
படத்தில் முக்கியமான விஷயம் என்று சொன்னால் அது ரயிலில் வரும் சண்டைக்காட்சி. இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்க எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் பைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து அக்காட்சியை படமாக்கினோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த சண்டைக்காட்சி பிடிக்கும்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவரைப் பற்றிக் கண்டிப்பாக இங்கே கூறவேண்டும். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதைவிட பல மடங்கு வேலாயுதத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும் எல்லா பாடலிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, வெஸ்டர்ன், நாட்டுப்புற பாட்டு என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை இருக்கும். அதுதான் நீண்டகாலத்திற்கு நிலைக்கும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு.
ரசிகர்களாகிய உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.
மொத்தத்தில் “வேலாயுதம்” படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.
இவ்வாறு விஜய் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment